Latest News
திங்கள், 20 ஏப்ரல், 2015

காஞ்சனா 2 – திரை விமர்சனம்!


முனி, காஞ்சனா என காமெடி + ஹாரர் படங்களை கொடுத்த ராகவா லாரன்ஸின் அடுத்த படைப்பு தான் காஞ்சனா 2. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராஜவேல் ஒளிவீரர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை இயக்கி, தயாரித்து, நடித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
டாப்ஸி வேலை செய்யும் கிரீன் டிவி சேனல் முதலிடத்தை இழந்து 2ஆம் இடத்திற்குத் தள்ளப்பட, பரபரப்பாக எதையாவது செய்து மீண்டும் முதலிடத்தைப் பிடிக்க தீர்மானம் போடுகிறார்கள். அதற்காக பேய் பற்றிய நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்கத் திட்டமிடுகிறது அந்நிறுவனம். இதனால் மகாபலிபுரத்திலுள்ள பாழடைந்த பங்களா ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கே இல்லாத பேயை இருப்பதுபோல் காட்டி டிஆர்பியை எகிற வைக்கத் திட்டம் போடுகிறார்கள். நிகழ்ச்சியின் இயக்குனர் டாப்ஸி, கேமராமேன் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட கிரீன் டிவி டீம் அந்த பங்களாவிற்குப் போகிறது. அங்கே போனபிறகு நடக்கும் அதிரடி சம்பவங்களே ‘காஞ்சனா 2’வின் கதைக்களம்.
‘காஞ்சனா’வில் நடித்த ராகவா லாரன்ஸ், ஸ்ரீமன், கோவை சரளா ஆகியோரோடு இந்த 2ஆம் பாகத்தில் லக்ஷ்மி ராய்க்குப் பதிலாக டாப்ஸி, சரத்குமாருக்குப் பதிலாக நித்யாமேனன், வில்லன்களாக ஜெயப்பிரகாஷ், ராஜேந்திரன் ஆகியோரை களமிறக்கியிருக்கிறார் இயக்குனர் ராகவா லாரன்ஸ். ‘காஞ்சனா’விற்கும் இந்த 2ஆம் பாகத்திற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. அதைப்போலவே முதல் பாதியை காமெடியாகவும் 2ம் பாதியை ஆக்ஷன் + ஹாரராகவும் உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் இரண்டாம்பாதியில் இல்லை. குறிப்பாக ‘காஞ்சனா’வின் மிகப்பெரிய பலமாக சரத்குமார் சம்பந்தப்பட்ட ப்ளாஷ்பேக் காட்சி இடம்பிடித்திருந்தது. ஆனால், இதில் வரும் நித்யாமேனனின் ப்ளாஷ்பேக் ரசிகர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதோடு இரண்டாம்பாதியின் நீளமும் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் ஒரு கட்டத்திற்கு மேல் போரடிக்கத் துவங்குகிறது.
‘காஞ்சனா’வைவிட இதில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக லாரன்ஸ், டாப்ஸியின் அந்த மெலடிப் பாடல், சதா ‘அலறிக்’ கொண்டேயிருக்கும் படத்தில் ஆறுதல் டச்! ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங், கிராபிக்ஸ் போன்றவற்றிற்கு சவாலான பணிகளைக் கொடுத்திருக்கிறார் லாரன்ஸ். மேக்அப்பும் பலே!
பகலில் துறு துறு, இரவில் வெட வெட என அதே பரபர லாரன்ஸ் இப்படத்திலும். டான்ஸ், ஃபைட், காமெடி, ரொமான்ஸ் என அனைத்து ஏரியாக்களிலும் புகுந்து விளையாடியிருக்கிறார். குறிப்பாக ப்ளாஷ்பேக் ‘மொட்ட சிவா’ கேரக்டர் மாஸ் ரகம்! டாப்ஸியை கிளாமருக்காக மட்டும் பயன்படுத்தாமல், நடிக்கச் செய்யவும் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள். பேயாக மாறி டாப்ஸி அலறும் காட்சிகளில் ரசிகர்களை உறைந்து போயிருக்கிறார்கள். மாற்றுத்திறனாளியாக வரும் நித்யா மேனன் கொஞ்ச நேரமே வந்தாலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
இப்படத்திலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள் கோவை சரளாவும், ஸ்ரீமனும். ராஜேந்திரன் என்ட்ரிக்கு தியேட்டரே அதிர்ந்தாலும், அதன்பிறகு பெரிதாக எதையும் அவர் செய்யவில்லை. தெலுங்குப்பட வில்லன் ரேஞ்சுக்கு வந்து போகிறார் ஜெயப்பிரகாஷ்.
பலம்
1. காமெடியும், பயமும் நிறைந்த படத்தின் முதல் பாதி.
2. லாரன்ஸ், டாப்ஸி, நித்யாமேனன், கோவை சரளா உள்ளிட்டோரின் நடிப்பு
3. பெரிய அளவில் உழைப்பைக் கொட்டியிருக்கும் டெக்னிக்கல் விஷயங்கள்.
பலவீனம்
1. இழுவையான இரண்டாம்பாதி
2. ‘சென்டிமென்ட’ பாதிப்பை ஏற்படுத்தாத ப்ளாஷ்பேக் காட்சி
3. மசாலாத்தனம் அதிகரித்துப்போன க்ளைமேக்ஸ்!
சுவாரஸ்யமான திரைக்கதைக்காக மெனக்கெடாமல் கிராபிக்ஸ், பின்னணி இசை, எடிட்டிங் ட்ரிக் போன்றவற்றிற்காக அதிகம் மெனக்கெட்டதாலோ என்னவோ ‘காஞ்சனா’ தந்த திருப்தியை இந்த 2ஆம் பாகம் தரவில்லை. இருந்தாலும் லாரன்ஸ், கோவை சரளா அடிக்கும் ரணகள காமெடிக்காக ஒரு ‘விசிட்’ அடிக்கலாம்.
மொத்தத்தில் இப்படம் ஹாரரிலும், காமெடியிலும் மக்களை வெகுவாக கவரும் என்பதில் ஐயம் இல்லை.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: காஞ்சனா 2 – திரை விமர்சனம்! Rating: 5 Reviewed By: Unknown