Latest News
வெள்ளி, 17 ஏப்ரல், 2015

ஓ காதல் கண்மணி – திரை விமர்சனம்


விவாகரத்து ஆன அப்பா-அம்மாவின் மீதுள்ள வெறுப்பால் திருமணத்தின் மீது நாட்டமே இல்லாமல் இருந்து வருகிறார் நாயகி நித்யாமேனன். இவரைப் போலவே, சென்னையில் அனிமேஷன் படித்துவிட்டு, பெரிய பணக்காரராகி, திருமணம் என்ற பந்தத்துக்குள் சிக்கிவிடாமல், ஜாலியான வாழ்க்கை வாழவேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு இருந்து வருகிறார் நாயகன் துல்கர் சல்மான்.
மும்பையில் இவருடைய படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கிறது. அதனால், சென்னையிலிருந்து புறப்பட்டு மும்பைக்கு செல்கிறார் துல்கர் சல்மான். அங்கு நாயகி நித்யாமேனனை எதிர்பாராத விதமாக சந்திக்கிறார். அடுத்தடுத்து இருவருடைய சந்திப்பும் எதிர்பாராதவிதமாக அமைய இருவரும் நெருங்கிய நண்பர்களாகிறார்கள். நாளடைவில் இருவருடைய எண்ணமும் ஒத்துப்போவது போல் இருப்பதால், இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன்-மனைவி போல் வாழ ஆரம்பிக்கிறார்கள். படுக்கையையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
குழந்தையில்லாமல் தனிமையில் வாழும் பிரகாஷ் ராஜ்-லீலா சாம்சன் தம்பதியின் வீட்டியில் தங்கியிருக்கும் துல்கர் சல்மான், பிரகாஷ்ராஜின் சம்மதத்தை பெற்று ஹாஸ்டலில் தங்கியிருக்கும் நாயகியை, தன்னுடன் தங்க வைக்கிறார். அப்போது, துல்கரை பார்க்க அவரது அண்ணன்-அண்ணி ஆகியோர் மும்பையில் உள்ள துல்கரின் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது, நித்யாமேனனுடன் தான் இருப்பது அவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக அவளை வெளியே அனுப்பிவிடுகிறார்.
இறுதியில், இவர்களது மறைமுகமான வாழ்க்கை துல்கரின் வீட்டாருக்கு தெரிந்ததா? இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா? அல்லது திருமணம் செய்யாமலேயே கணவன்-மனைவியாக வாழ்ந்தார்களா? என்பதை வித்தியாசமான திரைக்கதையுடன் படமாக்கியிருக்கிறார்கள்.
நாயகன் துல்கர் துறுதுறு நடிப்புடன் எளிதாக கவர்கிறார். அதேபோல் நாயகியுடன் நெருங்கி பழகும் காட்சிகளில் ரொமான்ஸ் கூட்டியிருக்கிறார். நாயகி நித்யாமேனன் அழகோ அழகு. மாடர்ன் பெண்ணாக பளிச்சிடுகிறார். கவர்ச்சியிலும் அதிகம் எல்லை மீறவில்லை. பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இவரது கேமரா கண்கள் அழகாக படமாக்கியிருக்கிறது. வைரமுத்துவின் வரிகளில் ஏ.ஆர். ரகுமானின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளன. பின்னணி இசையும் அருமை.
மணிரத்னம் தன்னுடைய வழக்கமான பாணியில் ஒரு அழகான காதல் கதையை படமாக்கியிருக்கிறார். படத்திற்கு பெரிய பலம் இவருடைய வசனங்கள் தான். நாயகனும், நாயகியும் போனில் உரையாடும்போது பேசிக்கொள்ளும் வசனங்கள், நாகரீக உலகில் ஒரு ஆணும் பெண்ணும் எந்தமாதிரி பேசிக் கொள்வார்களோ, அதை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறார்.
நாகரீக வாழ்க்கையில் திருமணம் என்பது நிம்மதியை கெடுக்கும், சுதந்திரத்தை பறிக்கும் என்று என்னும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாமல் தம்பதிபோல் வாழ்ந்தாலும், அவர்கள் இருவரும் உண்மையான அன்பை பரிமாறிக்கொண்டால் வாழ்க்கையில் இறுதி வரை பிரியாமல் வாழ்வார்கள். அது திருமணத்தின் வழியாகவே முடியும் என்பதை மிகவும் அழகாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் பலபல.
மொத்தத்தில் ‘ஓ காதல் கண்மணி’ ஒஹோ கண்மணி.

புதிய இடுகை
Previous
This is the last post.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: ஓ காதல் கண்மணி – திரை விமர்சனம் Rating: 5 Reviewed By: Unknown