Friday 11, Apr 2025
Latest News
வெள்ளி, 8 மே, 2015

Anonymous இந்தியா பாகிஸ்தான் – திரை விமர்சனம்!

ஒரு காதலனுக்கும் காதலிக்கும் நடக்கும் ஈகோ யுத்தத்தைச் சொல்லவே இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள்.


நாயகன் விஜய்ஆண்டனி நாயகி சுஷ்மாராஜ் ஆகிய இருவருமே வக்கீல்கள். ஒரே நேரத்தில் இருவரும் அலுவலகம் தேடுகிறார்கள். தரகர்களின் திருவிளையாடல் காரணமாக ஒரே கட்டிடத்துக்குள் ஆளுக்கொரு அறையை அலுவலகமாக அமைத்துக்கொள்ள நேரிடுகிறது. அப்போதிருந்து இருவருக்குமிடையே இந்தியா பாகிஸ்தான் மாதிரி போர் நடந்துகொண்டேயிருக்கிறது. கடைசிவரை அந்தப்போட்டியை சுவை குன்றாமல் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர் ஆனந்த்.
யார் முதலில் கேஸ் பிடிக்கிறார்களோ அவருக்கே அந்த அலுவலகம் முழுமையும் சொந்தம் என்று பந்தயம் கட்டிக்கொள்கிறார்கள்,

        இதற்காக அவர்கள் கேஸை தேடி அலையும் காட்சிகளைப் பார்த்தால் நமக்கெல்லாம் சிரிப்பு வருகிறது. ஒரு வக்கீல் பார்த்தால் என்ன நினைப்பாரோ? அதுவும் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை வழக்குப் போட வந்தவர் என்றெண்ணி விஜய்ஆண்டனி அணுகும்போது திரையரங்கம் சிரிப்பால் நிரம்புகிறது.

         முந்தைய படங்களில் அமைதியாவும் அழுத்தமாகவும் இருந்தது போலவே இந்தப்படத்திலும் இருக்கிறார் விஜய்ஆண்டனி. இது காமெடிப்படம் என்பதை அவர் பேசும் வசனங்கள் சொன்னாலும் முகத்தில் எதையும் காட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

                 பல்பொருள் அங்காடியின் கண்ணாடியொன்றின் மூலம் அறிமுகமாகும் நாயகி சுஷ்மாராஜ் நன்றாக இருக்கிறார். கொடுத்த வேடத்தைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்கிற எண்ணத்துடன் நடித்திருக்கிறார். விஜய்ஆண்டனியுடன் அவர் போடும் சண்டைகள் அழகு. ஒவ்வொரு முறையும் அவரிடம் பல்பு வாங்கினாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் விஜய்ஆண்டனியும் ஈடுகொடுக்கிறார்.
பசுபதியும் எம்எஸ்பாஸ்கரும் படத்துக்குள் வந்ததும் படம் கிராமத்துக்குப் போய்விடுகிறது. கிராமத்து முக்கியப்புள்ளியாக வருகிற பசுபதிக்கு நீண்டநாட்களுக்குப் பிறகு சொல்லிக்கொள்கிற மாதிரி இந்தப்படம் அமைந்திருக்கிறது. இன்னொரு முக்கியஸ்தரான எம்.எஸ்.பாஸ்கர் எதற்கெடுத்தாலும் ஆத்தாவைக் கும்பிடுவதும் கூடவே இருந்து மனோபாலா மணியாட்டுவதும் கலகலப்பு. .

                   நகரத்துக்குள் வந்துவிட்ட கிராமத்துமனிதர்களின் நடவடிக்கைகள் பழசென்றாலும் சிரிக்கவைக்கிறது.

                  ஆண்ட்ராய்டு போனைப் பார்த்துவிட்டு மழை வரப்போகிறது என்று சொல்லும் நாயகி சுஷ்மாராஜை அம்மன் ரேஞ்சுக்குக் கொண்டாடுகிறார்கள். இருட்டில் ஒரு பெண்ணைக் கற்பழித்தவன் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் விஜய்ஆண்டனியின் புத்திசாலித்தனத்தை வியப்பது என்று கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளும் சிரிக்கவைக்கின்றன.

                   அப்படியே கடைசிவரை போய்விடுவார்களோ என்று பயம் வருகிற நேரத்தில் நகரத்துக்கு வந்து மறுபடி அதேபோன்ற கலாட்டாக்கள். ஜெகன், காளி, யோகிபாபு ஆகியோர் தங்களால் இயன்ற அளவு சிரிக்கவைக்கிறார்கள்.
விஜய்ஆண்டனி சுஷ்மாராஜ் காதலே அந்தரத்தில் இருக்க பசுபதியின் மகனும் எம்.எஸ்பாஸ்கரின் மகளும் காதலிப்பதும் அந்தக்காதலை இவர்கள் சேர்த்துவைக்கப் பாடுபடுவதும் ஏற்கெனவே பார்த்த படத்தை நினைவுபடுத்துகிறது.

              படத்தின் தொடக்கத்தில் வருகிற காதலுக்குமரியாதை டிவிடியை
கடைசிவரை கொண்டுவந்திருக்கிறார்கள். அவ்வளவு சிக்கலான ஆதாராம் வெளியில் இருக்கிறதென்கிற பதட்டமே இல்லாமல் இன்ஸ்பெக்டர் இருப்பதும் கடைசிநேரத்தில் அதை வைத்துக்கொண்டு அடிக்கும் கூத்துகளிலும் எந்தவகையிலும் லாஜிக் பார்க்காமல் இருந்தால் சிரிக்கலாம்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் ஓம் தன் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார். இசையமைப்பாளரே கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் தீனாதேவராஜன். பாடல்கள் கேட்கிற மாதிரி இருக்கின்றன.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: இந்தியா பாகிஸ்தான் – திரை விமர்சனம்! Rating: 5 Reviewed By: Unknown